பொறியியல் படிப்பை தேடும் மாணவர்களின் பெரும் கனவு, இந்தியாவின் ஐஐடி, என்ஐடி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், சாதாரண பொறியியல் கல்லூரிகளில் நுழைந்து விடுவதுபோல மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் வெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு நுழைந்து விட முடியாது. அங்கே நுழைய வேண்டும் எனில், அதற்கென நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுதான் ஜேஇஇ நுழைவுத்தேர்வு.
அதென்ன ஜேஇஇ தேர்வு?:
உயர்கல்விக்காக உலகளவில் நடத்தப்படும் கடினமான நுழைவுத்தேர்வுகளில் இந்தியாவில் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத்தேர்வும் ஒன்றாகும். பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு:
பிஇ., / பிடெக்., / பிஆர்க்., / பி.பிளானிங் படிப்புகளில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல்கட்டமாக ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ., மற்றும் இரட்டை தொழில்நுட்ப பட்டங்களை வழங்கும் ஐ.ஐ.இ.எஸ்.டி., உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும். இதர தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழங்கள் முதன்மைத் தேர்வு முடிவுகளுடன், அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வின் முடிவுகளின்படியும் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
ஜே.இ.இ., முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்ததாக ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெறுவர். இவ்விரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஐ.ஐ.டி., நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கிறது.
எதன் அடிப்படையில் வினாக்கள் இடம்பெறும்?:
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விரும்புவோர் முதல் தாளை எழுதுகின்றனர். முதல் தாளில், பிளஸ்-2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். மூன்று பாடங்களில் இருந்தும் தலா 30 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. தவறான பதில் அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் கழித்துக் கொள்ளப்படும். இத்தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் ஆன்லைன் மூலமே தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சூழலைப் பொருத்து ஆப்லைனிலும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் இரண்டாம் தாள் என்பது, பி.ஆர்க்., பி.பிளானிங்., படிப்புகளில் சேர விழைவோருக்கானது. இரண்டாம் தாளில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் கணிதம் மற்றும் திறனறி வகை வினாக்கள் இடம்பெறும். இரண்டாவது பிரிவில் வரைகலை அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் இரண்டு பிரிவுகளுமே ஆப்லைனில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ்ட்:
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய முதல் 2.24 லட்சம் மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.
நாம் மேலே சொன்னதுபோல, ஐஐடி கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, ஜேஇஇ முதன்மைத் தேர்வு மற்றும் அட்வான்ஸ்ட் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே சேர்க்கை அனுமதி வழங்குகின்றன.
ஐஐடி மட்டுமின்றி தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐஎஸ்எம்), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) மற்றும் ஐஐஎஸ்சி ஆகிய கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட இரு தேர்வுகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வானது இரண்டு தாள்களைக் கொண்டது. ஒவ்வொன்றுக்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இரண்டு தாள்களையும் கட்டாயம் எழுத வேண்டும்.
ஒவ்வொரு தாளிலும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெறும். அனைத்தும் கொள்குறி வகையில் இருக்கும். அதாவது, சரியான விடையைத் தேர்வு செய்து எழுதினால் போதுமானது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சி பெறுவது அவசியம். அனைத்து வினாக்களுமே திறனறி வகையிலேயே அமைந்திருக்கும்.
ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை (www.nta.ac.in) பொறுப்பேற்று நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மையங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இணையதள முகவரி:
ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் தொடர்பான மேலதிக விவரங்களை www.jeemain.nic.in மற்றும் www.jeeadv.ac.in என்ற இணையதள பக்கங்களில் பார்க்கலாம்.