Skip to main content

மாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்! #13

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

 

students  BA, Economics Study

 

 

கோவிட்-19 தாக்கத்தால் உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்துத் துறைகளுக்கும் இருக்கிறது. குறிப்பாக, பொருளியல் வல்லுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

 

பொருளாதாரம், வாழ்வில் இரண்டற கலந்து விட்டது. எனினும், மாணவர் என்ற அளவில் அவர்களுக்கு மேல்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போதுதான் அதைப்பற்றிய அடிப்படை பாடமே தொடங்குகிறது எனலாம். அதுவும், மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளைக் கடந்து குரூப்-3 எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருளியல் பாடம் அறிமுகம் ஆகிறது.

 

பொதுவாகவே மூன்றாவது பாடப்பிரிவை தெரிவு செய்வோரில் பலரும், உயர்கல்வி என்று வரும்போது பி.காம்., பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். எந்தளவுக்கு பி.காம்., படிப்பிற்கு வேலைவாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கான வேலைவாய்ப்புகளும், வளமான எதிர்காலமும் பி.ஏ., பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கும் இருக்கிறது. இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரில் சொல்லி வருகிறோம். எந்த படிப்பும் மோசமானது அல்ல; எல்லா படிப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. பொருளியலும் அப்படித்தான்.

 

பிளஸ்-2 கலைப்பிரிவு மாணவர்களுக்கு, பி.ஏ. தொகுதியில் மொழிப்பாடம் முதல் ஏராளமான பாடப்பிரிவுகள் இருக்கின்றன. இப்போது நாம் பொருளாதாரம் படிப்பிற்கான வாய்ப்புகள் குறித்து காணலாம்.

 

பாடப்பிரிவு: பி.ஏ., பொருளாதாரம்

கால அளவு: 3 ஆண்டுகள்

 

தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி. கலைப்பிரிவில் பொருளாதாரத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

 

இணையான படிப்புகள்: பிளஸ்-2 முடித்து இளங்கலை பொருளாதாரம் படிக்க விரும்புவோர், அத்துடன் பி.ஏ., வணிக பொருளாதாரம், பி.எஸ்சி., கணித பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளையும் எடுத்து படிக்க முடியும். இவை மூன்றுக்கும் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை புரிந்து கொண்டு படித்தாலே போதுமானது.

 

பி.ஏ. பொருளாதாரம்: பொருளாதாரத்தில் அடிப்படைகள், கோட்பாடுகள், பயன்பாடுகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பாடமாகும்.

 

பி.ஏ. வணிக பொருளாதாரம்: இது நிறுவன நடத்தை, நிதி மேலாண்மை, செலவு கணக்கியல் வணிக தொடர்பியல், சந்தைப்படுத்துதல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகும்.

 

பி.எஸ்.சி. கணித பொருளாதாரம்: இப்படிப்பில் நடைமுறை பாடங்கள் மட்டுமின்றி, புள்ளியியல், கணிதம் ஆகியவற்றை விரிவாக படிக்கலாம்.

 

சேர்க்கை நடைமுறை: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பொருளியல் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சேர பிளஸ்2வில் பெற்ற மதிப்பெண்கள் போதுமானது.

 

மேலும், புது டெல்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தின் மூலம் நிதியுதவி பெறும் நிறுவனமான மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் (எம்எஸ்இ) கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த எம்.ஏ., பொருளாதாரம் படிப்பில் சேர்ந்து பயிலலாம். இதில் முதல் மூன்று ஆண்டுகள் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்திலும் பயிலலாம். இக்கல்வி நிறுவனத்தில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நுழைத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

 

பொருளியல் துறை என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத பேரங்கமாக திகழ்கிறது. கிராமப்புற வளர்ச்சி, புள்ளியியல், உள்நாட்டு உற்பத்தி, வங்கித்துறை, நிதி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளுடன் நெருக்கிய தொடர்புடையது என்பதால், இத்துறைக்கு எல்லா காலத்திலும் மவுசு குறைவதே இல்லை.

 

படிப்புக்கான செலவு: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பு வழங்கப்படுவதால், பெரும்பாலும் செலவு மிக மிகக்குறைவு. முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், பொருளியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்குமே படிப்புக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரு சாதாரண கல்லூரியில் படிப்பதைக் காட்டிலும், இதற்கென உள்ள தனித்துவமான கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள ஏதுவாகிறது.

 

வேலைவாய்ப்புகள்: பி.ஏ. பொருளியல் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சுய தொழில் முனைவோராகவும் உருவாக முடியும்.

 

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பல துறைகளிலும் போட்டித்தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பில் சேரலாம்.

 

தனியாரைப் பொருத்தவரை தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பன்னாட்டு மற்றும் வணிக நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனைகள், சந்தை ஆய்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், நிறுவன மற்றும் வாடிக்கையாளர் சேவை மேலாளர், சந்தை ஆய்வாளர், பொருளாதார ஆலோசகர், பொருளாதார முன்கணிப்பாளர், பொருளாதார மற்றும் சமூக தொழில் முனைவோர், இழப்பீடு மற்றும் பெனிஃபிட் மேலாளர், கடன் மற்றும் நிதி ஆய்வாளர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் உள்ளன. பிஏ பொருளியல் படித்த தனித்திறன் உள்ள ஒருவரால் தனக்குத்தானே வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்பது இப்படிப்பின் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.

 

 

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.