ஆண், பெண் நட்பைச் சிறப்பிக்கும் வகையில், எழுத்தாளரும் கவிஞருமான திண்டிவனம் சாம்பவி சங்கர், ‘அன்பின் முகவரி நீயானால்’ என்னும் புதினத்தை எழுதியிருக்கிறார். அகில்நிலா பதிப்பகம் தயாரித்திருக்கும் இந்தப் புதினத்தை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, அதன் முதற்படியை எழுத்தாளர் லதா சரவணன் பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்ட வைரமுத்து “எழுத்தாளர்கள், நமது முன்னோடி படைப்பாளர்களின் படைப்புகளை ஆழ்ந்து படிக்க வேண்டும். நமக்கு முன் நடந்த பாதங்கள், நமக்குப் பாடங்கள் என்பதை உணர வேண்டும். அப்போதுதான், எழுத்துக்களும் சிந்தனைகளும் மேன்மேலும் பண்படும். இங்கே, பொதுவாகப் பெண் படைப்பாளர்களின் எண்ணிக்கை குறைவு என்ற கருத்து நிலவுகிறது. அதை முறியடிப்பதுபோல் இப்போது பெண் படைப்பாளர்கள் நம் கண்ணெதிரே தழைத்துத் தலை நிமிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது, பரவசம் ஏற்படுகிறது. இது சமூகம் சந்திக்கும் நல்ல அறிகுறி. அந்த வகையில், ‘அன்பின் முகவரி நீயானால்’ என்கிற இந்தப் புதினத்தின் தலைப்பே நம்மைக் கவர்கிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் சங்கர், தலைமையாசிரியர் ராஜவேலு, சூர்யா, செல்வி அபிநயா, அமுதா, இலக்கியன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.