Skip to main content

தைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Vadaloor Vallalar festival

 

வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபை தருமச் சாலையில் 151வது தைப்பூசப் பெருவிழா நேற்று திருவருட்பா முற்றோதல் மற்றும் சன்மார்க்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

இராமலிங்க அடிகளார் பிறந்த மருதூர் சன்னதி, தண்ணீரில் விளக்கு ஏற்றிய கருங்குழி வள்ளலார் சன்னதி, ஒளி தேகமான மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய இடங்களிலும்  கொடி ஏற்றப்பட்டது. அதையடுத்து, இன்று அதிகாலை 5:50 மணியளவில் சத்திய ஞானசபையில் மணி அடிக்கப்பட்டது. சரியாக 6:00 மணிக்கு கதவு திறக்கப்பட்டு, ஏழு திரைகளையும் ஒவ்வொன்றாக நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. முதல்கால ஜோதியானது 6:00 மணி முதல் 7:00 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை காண்பிக்கப்பட்டது. இதேபோல் காலை 10:00 மணி, மதியம் 1:00 மணிக்கும் ஜோதி தரிசணம் காண்பிக்கப்பட்டது. மேலும் இரவு 7:00 மணி, 10:00 மணி, நாளை அதிகாலை 5:30 மணி ஆகிய ஆறு முறைகள் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

 

Vadaloor Vallalar festival

 

வடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள், சபை வளாகத்தில் தங்கி உள்ளவர்கள் மட்டும் உற்சாகத்துடன் ஜோதி தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்தனர். மக்கள் நேரடியாக பங்கேற்கத் தடை விதித்துள்ளதால் சபை நிர்வாகம் சார்பில் யூடியூப் வழியாகவும், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும் ஒளிபரப்பு செய்ய இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், நெய்வேலி டி.எஸ்.பி ராஜேந்திரன், சபை நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வடலூர் தைப்பூச ஜோதி; பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தரிசனம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Thaipusam Jyothi Darshan at Vadalur Sathya Gnana Sabha

ஜீவகாருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர். 

இந்த ஆண்டு  153 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நேற்று (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்பெருஞ்ஜோதி விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெற்றது . இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனத்தை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை(ஜன.26) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவைக் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை. மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சத்திய ஞான சபை வளாகப் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெறுகிறது. மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.