வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபை தருமச் சாலையில் 151வது தைப்பூசப் பெருவிழா நேற்று திருவருட்பா முற்றோதல் மற்றும் சன்மார்க்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இராமலிங்க அடிகளார் பிறந்த மருதூர் சன்னதி, தண்ணீரில் விளக்கு ஏற்றிய கருங்குழி வள்ளலார் சன்னதி, ஒளி தேகமான மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய இடங்களிலும் கொடி ஏற்றப்பட்டது. அதையடுத்து, இன்று அதிகாலை 5:50 மணியளவில் சத்திய ஞானசபையில் மணி அடிக்கப்பட்டது. சரியாக 6:00 மணிக்கு கதவு திறக்கப்பட்டு, ஏழு திரைகளையும் ஒவ்வொன்றாக நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. முதல்கால ஜோதியானது 6:00 மணி முதல் 7:00 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை காண்பிக்கப்பட்டது. இதேபோல் காலை 10:00 மணி, மதியம் 1:00 மணிக்கும் ஜோதி தரிசணம் காண்பிக்கப்பட்டது. மேலும் இரவு 7:00 மணி, 10:00 மணி, நாளை அதிகாலை 5:30 மணி ஆகிய ஆறு முறைகள் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
வடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள், சபை வளாகத்தில் தங்கி உள்ளவர்கள் மட்டும் உற்சாகத்துடன் ஜோதி தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்தனர். மக்கள் நேரடியாக பங்கேற்கத் தடை விதித்துள்ளதால் சபை நிர்வாகம் சார்பில் யூடியூப் வழியாகவும், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும் ஒளிபரப்பு செய்ய இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், நெய்வேலி டி.எஸ்.பி ராஜேந்திரன், சபை நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.