Skip to main content

தொடக்கமும் அவனே- முடிவும் அவனே!

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

மும்மூர்த்திகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையது. அன்றைய தினம் உணவை விடுத்து விரதமிருந்து, நான்கு யாமமும் உறங்காமல் விழித்திருந்து சிவபூஜை செய்தல் சிறப்புடையது. நான்கு யாமமும் விழித்திருக்க முடியாதவர்கள் லிங்கோற்பவ காலம் வரையிலாவது விழித்திருக்க வேண்டும். லிங்கோற்பவ காலம் என்பது, நள்ளிரவுக்கு முன்னுள்ள ஒரு நாழிகையும், பின்னுள்ள ஒரு நாழிகையும் உள்ளடக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நள்ளிரவில்தான் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றியருளினார் என்பதால், இந்த இரவில் உலகெங்கிலுமுள்ள லிங்கங்களில் தோன்றுகிறார் என்பது ஐதீகம். ஆகவேதான் அன்றைய தினம் லிங்கோற்பவ காலத்தில் சிவ வழிபாடு செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. எல்லா சிவாலயங்களிலும் சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்றாலும், சிவராத்திரி தலங்கள் என்று ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருக்கோகர்ணம், திருவைகாவூர் ஆகிய தலங்கள் போற்றப்படுகின்றன. 

shivan

கும்பகோணம்- திருவையாறு வழித் தடத்திலுள்ள சுவாமிமலையிலிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவைகாவூர். பாடல்பெற்ற தலமான இது "வில்வாரண்ய க்ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு புராண வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. அறிந்தோ அறியாமலோ சிவராத்திரியன்று விழித்திருந்து சிவனை பூஜிப்போர் முக்தி பெறுவர் என்பதை விளக்குவதாகவும் அவ்வரலாறு அமைந்துள்ளது. தவநிதி என்ற முனிவர் இத்தலத்தில் தங்கியிருந்து இறைவழிபாடு செய்துவந்தார். ஒருநாள் அவ்வழியே வந்த வேடன் ஒருவன் மான் ஒன்றைக் கண்டு அதைத் துரத்தி வந்தான். வேடனுக்கு அஞ்சிய மான் கோவிலுக்குள் நுழைந்து முனிவரிடம் அடைக்கலம் புகுந்தது. மானைக் கொல்ல வந்த வேடன் அதற்குத் தடையாய் முனிவர் இருந்ததைக்கண்டு கோபமடைந்து அவரைத் தாக்க முயன்றான். தன்மேல் பக்திகொண்ட முனிவரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் புலி வடிவம் எடுத்து வேடனைத் துரத்தினார். வேடன், புலியிடமிருந்து தப்பிப்பதற்காக கோவிலுக்குள்ளிருந்த வில்வ மரத்திலேறி அமர்ந்துகொண்டான். அவனைத்  துரத்திக்கொண்டு வந்த புலி வடிவிலிருந்த சிவபெருமானும் அந்த மரத்தின் கீழே நிற்க, வேடன் மரத்தைவிட்டுக் கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இரவு நேரமாயிற்று. 

வேடனைப் பசியும் தூக்கமும் வாட்டின. புலி அந்த இடத்தைவிட்டு நகராததால் அதை விரட்டுவதற்காக வேடன் வில்வ மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து புலியின்மேல் போட்டுக் கொண்டே இருந்தான். இரவு முழுவதும் அவன் போட்ட இலைகள் புலிவடிவில் இருந்த சிவபெருமான்மீதே விழுந்தன. அன்று சிவராத்திரி நாள். இரவு முழுவதும் வேடன் பசியுடன், நித்திரையின்றி வில்வ இலைகளை சிவபெருமான்மேல் போட்டதால், அவனையறியாமலே அவனுக்கு புண்ணியம் கிட்டியது. சிவபெருமான் வேடனுக்கு காட்சிதந்து மோட்சம்  அளித்தார். விதிப்படி அன்று அதிகாலை வேடனுக்கு ஆயுள் முடியவேண்டிய நேரம். அவன் உயிரைப் பறிக்க எமதர்மன் கோவிலுக்குள் வந்தான். நந்தி தேவர் அவனைத் தடுக்கவில்லை. எமதர்மன் வேடனது உயிரைக் கவர வந்திருப்பது கண்டு சினந்த சிவபெருமான், கையில் கோலுடன் தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி யமனை விரட்டினார். எமன் அங்கிருந்து அகன்றான். எமனைக் கோவிலுக்குள் அனுமதித்த நந்தி தேவர்மீது ஈசனின் கோபம் திரும்பியது. சிவபெருமான் கோபத்திற்கு அஞ்சிய நந்திதேவர் தன் மூச்சுக் காற்றால் எமனைக் கட்டுப்படுத்தினார். எமன் தன்னை மன்னித்தருளும்படி ஈசனை வேண்ட, அவர் எமனை விடுவித்து அருள் பாலித்தார். பின்னர் எமன் அவ்வாலயத்தின் எதிரே தன் பெயரால் தீர்த்தம் அமைத்து, அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டுத் தன் இருப்பிடம் சென்றான். இத்தலத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றிரவு நான்கு கால விசேஷ பூஜைகள் நடைபெறும்.

shivan

 சிவராத்திரி விரதமிருந்து சிறப்பான பலனைப் பெற்றவன் முசுகுந்தன் என்பது வரலாறு. ஒரு வில்வமரத்தடியில் சிவபெருமானும் பார்வதிதேவியும் அமர்ந்திருந்தனர். அந்த மரத்தின்மீது உட்கார்ந்திருந்த குரங்கு தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே இரவு முழுவதும் மரத்திலிருந்து வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தது. அந்த இலைகள் மரத்தின் கீழே அமர்ந்திருந்த சிவபெருமான்- பார்வதி இருவர்மீதும் விழுந்தன. சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது விசேஷம். இரவு முழுவதும் விழித்திருந்து வில்வ இலையால் தனக்கு அர்ச்சனை செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் குரங்கின்மீது கருணைகொண்டு, "நீ அடுத்த பிறவியில் புகழ்மிக்க சக்கரவர்த்தியாய்ப் பிறப்பாய்'' என வரமருளினார். 

வரம்பெற்ற குரங்கு, "நான் சக்கரவர்த்தியாகப் பிறந்தாலும் என் முகம் குரங்கு முகமாகவே விளங்கவேண்டும்'' என வேண்டியது. மேலும் முசுகுந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்றும், கடைசிவரை தான் சிவராத்திரி விரதமிருக்க அருள்புரிய வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டான். அதன்படியே அவன் தொடர்ந்து சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டதன் பலனாக சிவபதம் அடைந்தான்.தேவர்களும் அனுஷ்டித்த இவ்விரத நன்னாளின் சிறப்புகள் அநேகம். அமாவாசைக்கோ, பௌர்ணமிக்கோ முந்திய பதினான்காம் நாள் சதுர்த்தசி திதி. இது தேய்பிறை என்றால் மறுநாள் அமாவாசை. அது சந்திரன் முழுமையாக மறையும் நாள். வளர்பிறை சதுர்த்தசி என்றால் மறுநாள் பௌர்ணமி. அது சந்திரன் முழுமையாகத் தெரியும் நாள். தொடக்கம்- முடிவு என இரண்டையும் நிறைவு செய்பவர் சிவ பெருமானே என்பதைக் குறிப்பதாக சதுர்த்தசி திதியில் சிவராத்திரி தினம் அமைகிறது. துன்பங்களைத் தரும் ஆசாபாசங்களை- உண்ணாமல், உறங்காமல் விரதமிருந்து அறுக்கும் இரவே சிவராத்திரி. இருளாகிய கொடிய ஆணவ மலத்தைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையே சிவராத்திரி நமக்கு விளக்குகிறது.

-கே. சுவர்ணா

Next Story

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த பிரம்மாண்ட சிவன் சிலை கொண்ட கோவில்.!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

keeramangalam shivarathri function

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் சுவாமி (சிவன்) கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்யப்பட்டு பிரமாண்டமான முறையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.

 

இந்த ஆலயத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் காதணி விழா, திருமணம் உட்பட ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தினசரி அபிசேகங்களிலும், பிரதோஷ வழிபாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த ஆலயத்தின் முன்னால் உள்ள தடாகத்தில் குளித்த பிறகே தலைமைப் புலவர் தர்க்கம் செய்ததாக கூறப்படுகிறது.

 

தற்போது ஆலயத்தின் முன்னால் உள்ள தடாகத்தின் மையப் பகுதியில், சுமார் 81 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிவன் சிலையும் எதிரில் தலைமைப் புலவர் நக்கீரருக்கு 7 1/4 (ஏழேகால்) அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்று (11.03.2021) சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தைச் சுற்றிவந்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று நடந்த சிவராத்திரி திருவிழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கி இருந்தனர். இரவு முழுவதும் பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள் கொண்டு அபிசேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.

 

 

Next Story

1008 ருத்ராட்சம் அணிவித்து மறவனேசுவரன் சாமிக்கு சிவனடியார்கள் வழிபாடு! 

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

Sivanadiyars worship Maravaneswaran Swami wearing Rudratsam!

 

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் பழுவேட்டரையர்கள் காலத்தில் (1,400 ஆண்டுகள் பழமையான) மறவனேசுவரன் கோயில் அமைந்துள்ளது.

 

தீபாவளியை முன்னிட்டு நேற்று சிவனடியார்கள் மறவனேசுவரன் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு 1008 ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இக்கோவிலில் தமிழ் மரபுப்படி மந்திரங்கள் சொல்லி, எண்ணெய் தீபம் ஏற்றி, கற்பூரம் காண்பித்து சிவனடியார்களால் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டனர்.


மேலும், சிவனடியார்களாக தொண்டாற்றுவோருக்கு சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்திய பின்னர், ருத்ராட்ச மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.