Skip to main content

நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ தேரோட்டம் நிகழ்ச்சி! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Nilameka Perumal Temple Vaikasi Visakha Pramorsava festival

 

கரூர் மாவட்டம், குளித்தலையில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி  விசாக பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கரோனா  தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த ஜூன் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன்  திருவிழா துவங்கியது.

 

அதனைத் தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கண்டார். வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் 9-வது நாளான இன்று, முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ பெருமாள் அம்பாள்களுடன்  எழுந்தருளிய திருத்தேரினை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று நாமம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

 

Nilameka Perumal Temple Vaikasi Visakha Pramorsava festival

 

இந்நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். தேரானது பழைய ஆஸ்பத்திரி சாலை, பஜனை மடம், ஆண்டார் வீதி, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.