Skip to main content

கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பற்றிய திருஞானசம்மந்தர்... திருநீலகண்ட பதிகத்தின் மகிமை கூறும் நாஞ்சில் சம்பத்!

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், திருநீலகண்ட பதிகம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கரோனா என்ற கொள்ளை நோய் இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தக் கொள்ளை நோயில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் நீத்துவிட்டனர். இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்ள முடியாமல் உலகம் தடுமாறுகிறது. சுரம் என்ற காய்ச்சல் வந்துவிட்டால் அந்தக் காய்ச்சலைக் கண்டு அச்சப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. காய்ச்சல், இருமல் வந்தால் மாத்திரை போட்டுக்கொண்டு வழக்கமாக இயங்குகிற நடைமுறைகள் எல்லாம் இன்றைக்கு ஒத்துவரவில்லை. இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்ள முடியாமல் வல்லரசுகளே திணறுகின்றன. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் இன்றைக்கும் திண்டாடத்தான் செய்கிறது. இந்த மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி தடுப்பூசிதான் என்று சொல்லி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. அதே நேரத்தில், தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலையும் பார்க்க முடிகிறது. 

 

இந்தக் கொள்ளை நோய்கள் இன்றைக்குத்தான் வருகிறதா என்றால் அன்றைக்கும் வந்தன. ஞானசம்மந்தர் காலத்திலும் இத்தகைய கொள்ளை நோய்கள் இருந்தன. கொங்கு நாட்டில் உள்ள புகழ்பெற்ற திருத்தலம் திருச்செங்கோடு. அந்த இடத்தில் அர்த்தநாரீஸ்வரராக இறைவன் காட்சி தருவார். ஞானசம்மந்தர் ஒருமுறை அங்கு சென்றபோது ஆயிரக்கணக்கானோர் சங்கமாக அமர்ந்திருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் காய்ச்சல் வந்து அந்தக் கவலையில் மெலிந்து போயிருந்தனர். அவர்களைப் பார்த்து ஞானசம்மந்தர், கவலைப்படாதீர்கள் உங்களுக்கு எதுவும் ஆகாது என்று சொல்லி ஒரு பதிகம் பாடியதாக செய்திகள் உள்ளன. 'அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்' எனப் பாடப்பட்ட அப்பதிகத்திற்கு திருநீலகண்ட பதிகம் என்று பெயர். 

 

சுரம் வரும்போது இந்தப் பதிகத்தைப் பாடியதால் காய்ச்சல் குறைந்தது என்று தமிழில் செய்திகள் உள்ளன. சமகாலத்தில் இது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று கேட்டால், படித்தால்தானே தெரியும். அன்றைக்கு நம்முடைய தமிழுக்கு அவ்வளவு வலிமை இருந்தது என்பதைத்தான் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். பாட்டு பாடினால் காய்ச்சல் குறையுமா என்று கேட்டால் நம்பிக்கை உள்ளவர்கள் அதை நம்புவார்கள். அதில் நம்பிக்கை இல்லாதவர்களை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. அன்றைக்கு இருந்த உணவுமுறை, வாழ்க்கை முறை, அணுகுமுறை இன்றைக்கு இருப்பதைப்போல இல்லை. இயற்கையோடு இசைந்து வாழ்ந்த அன்றைய வாழ்க்கையில் ஒரு சுரம் வந்துவிட்டால் உடனே மருத்துவமனை நோக்கி ஓடும் நிலை இல்லை. ஞானசம்மந்தன் போன்ற இறைவன் அருள்பெற்ற அடியார்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்காக இறைவனிடம் விண்ணப்பம் செய்தால் அவர்களது குறையை இறைவன் நீக்கிவிடுகிறான் என்பதற்குச் சான்றுதான்  திருநீலகண்ட பதிகம். 

 

சமயக்குறவர்களில் ஞானசம்மந்த பெருமான் வயதில் மிகவும் இளையவர். மூன்று வயதாக இருக்கும்போதே இறைவனின் அருள்பெற்று, அப்போதே பதிகமும் பாடியுள்ளார். ஞானசம்மந்த பெருமானின் தந்தை, சிறுவன் ஞானசம்மந்தரை அழைத்துக்கொண்டு சீர்காழி குளக்கரைக்குக் குளிக்கச் சென்றபோது மகனைக் கரையில் உட்காரவைத்துவிட்டு அவர் மட்டும் குளத்தில் இறங்கிக் குளிக்கிறார். குளித்துவிட்டு வந்து பார்த்தபோது மகனின் கடைவாயில் எச்சில் ஒழுகுகிறது. அதைக் கண்ட ஞானசம்மந்தரின் தந்தை, வாயில் எச்சி ஒழுகுகிறதே... ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நீ யாரிடத்தில் இருந்து பாலை வாங்கிக் குடித்தாய் என்று கேட்டபோது, அதோ பார் வானத்தில் என 'தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்' என்று பாடி இறைவனைக் காட்டுகிறார். ஆனால், அவரின் தந்தையின் கண்களுக்கு இறைவன் புலப்படவில்லை. சின்னஞ்சிறு வயதிலேயே இப்படி ஒரு அதிசயத்தை ஞானசம்மந்தர் நிகழ்த்தினார் என்பதைப் படிக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. பாடலைப் பாடி சுரத்தை நீக்க முடியும் என்று நம்புகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். நம்பிக்கை உடையவர்களை அது காப்பாற்றத்தான் செய்கிறது. எனவே இந்தப் பாட்டைப் பாடினால் சுரம் நீங்குமா என்று கேட்டால் அது பாடுகிறவர்களின் பக்தியைப் பொறுத்தது என்றுதான் நான் சொல்வேன்.