மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"குன்றுதோறும் இருந்து ஆட்சி செய்யும் முருகன் தமிழர்களின் வழிபடு கடவுளாக இருக்கிறான். அப்பனுக்கு உபதேசம் செய்தவன், சூரனை சம்ஹாரம் செய்தவன், கேட்டதை கொடுப்பவன் என்று பல சிறப்புகள் முருகனுக்கு உண்டு. வயிற்று வலியால் அவதிப்பட்ட பகழிக்கூத்தருக்கு அருள் செய்ததால் அவர் தந்த திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிற நூல். முருகன் மனசு வைத்தால் வயிற்று வலியால் அவதிப்படுகிறவனையும் வாழவைப்பான், வாய் பேச முடியாதவர்களையும் பேச வைப்பான், மரத்தின் உச்சியில் இருப்பவனையும் நிலவின் உச்சியில் கொண்டு வைப்பான் என்ற நம்பிக்கை காலங்காலமாக தழிழர்கள் மத்தியில் இருக்கிறது. தைப்பூசத்தன்று பழனிக்கும் திருச்செந்தூருக்கும் அலையலையாய் பக்தர்கள் வருகிறார்கள். முருகன் மீது மட்டும் ஏன் இப்படியொரு நம்பிக்கை?
முருகனை வைத்து தமிழ்நாட்டின் அரசியல்கூட கடந்த காலத்தில் சுழன்றது. சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களின் இறைவழிபாட்டில் தவறாமல் முருகன் இடம்பெற்றுள்ளான். அதற்குச் சான்று, பரிபாடலிலும் சங்க இலக்கியங்களிலும் பல பாடல்கள் முருகனைப் பற்றி உள்ளன. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில், "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரை யுமங்கு வாழவைப்போன்" என்று முருகனைக் குறிப்பிடுகிறார். வள்ளி அழுத்தப்பட்ட குறவர் குலத்தைச் சார்ந்தவர். குறவர் குல வள்ளியை காதலித்து, அவளை திருமணமும் செய்துகொண்டான் முருகன். அந்தப் பாடலில், தமிழில் திட்டினால் அதை ஏற்றுக்கொண்டு அவரையும் முருகன் வாழவைப்பான் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
தமிழ் மீது அந்த அளவிற்கு காதல் கொண்டிருந்த முருகன், தமிழிலேயே தன்னை ஆராதிக்க வேண்டும், தமிழிலேயே தன்னை பாட வேண்டும், தமிழிலேயே தன்னை திட்ட வேண்டும் என்று விரும்பினான். முருகனை பற்றி பாடும்போது உறவு முறையையும் அருணகிரிநாதர் சுட்டுகிறார். உமையாள் பயந்த இலஞ்சியம் என்றும் மாயோன் மருகன் என்றும் முருகனுக்கு உறவுமுறைச் சொல்லி அவனிடத்தில் செல்வதற்காக அருணகிரிநாதர் ஆற்றுப்படுத்துவதை படிக்க படிக்க தமிழும் பக்தியும் நெஞ்சிலே வந்து குடிகொள்கிறது."