மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மக்களின் காய்ச்சலை பதிகம் பாடி திருஞானசம்பந்தர் குணப்படுத்தியது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
கரோனா என்ற கொள்ளை நோயினால் லட்சக்கணக்கான மக்கள் மரணத்தின் மடியில் விழுந்துவிட்டார்கள். இன்னார் இனியார் என்ற பேதமில்லாமல் இந்த நோய்க்கு ஆளாகி அஸ்தமானவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக வரவில்லை. நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கொள்ளை நோய் வருவதையும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதையும் வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் காலரா வந்தது. ஒரு காலத்தில் ஃபிளேக் வந்தது. இப்படி கொள்ளை நோய் வருவதும் மக்கள் சாவதும் இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போது வந்த கொள்ளை நோய் வெறும் காய்ச்சல்தான். காய்ச்சல் வந்தவுடன் இருமல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறுகிறான். நுரையீரல் பழுதுபடுகிறது. செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டும் பயனில்லாமல் உயிர் போய்விடுகிறது.
சமயக்குறவர்களில் முதல் குறவரான திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோடு என்ற இடத்திற்கு செல்கிறார். அங்கே இருக்கும் இறைவன் அர்த்தநாரியாக இருக்கிறான். சிவபெருமான் அம்பாளுக்கு உடலில் பாதி இடத்தை கொடுத்தார். பிரம்மா நாக்கிலே இடம் கொடுத்தார். திருமால் மார்பில் இடம் கொடுத்தார். இப்படி பக்தியிலும் இடஒதுக்கீடு இருந்தது. அர்த்தநாரீஸ்வரரை வணங்கிய திருஞானசம்பந்தர், கோவிலிலேயே அமர்ந்திருக்கிறார். அங்கு யாரையும் காணவில்லை. பின் விசாரித்ததில் ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் சுரம் வந்திருக்கிறது. அதனால் அவர்களால் கோவிலுக்கு வரமுடியவில்லை என்பது தெரிகிறது.
இந்த ஊர் மக்களுக்கு இருக்கும் நோய் உடனே தீரவேண்டுமென திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார்.
"அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும்
உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற்
போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்..."
இந்தப் பதிகத்தை அவர் பாடியதோடு மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும் பாடச் சொல்கிறார். பின்னர், சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியம் பெற்றுவிட்டார்கள் என்று செய்தி திருஞானசம்பந்தருக்கு வருகிறது. காய்ச்சல் வந்தால் இந்தப் பதிகம் பாடினால் காய்ச்சல் தீரும் என்ற நம்பிக்கை சைவர்கள் மத்தியில் இன்றைக்கும் உள்ளது. அதை அவர்கள் மேற்கொண்டும் வருகிறார்கள். திருஞானசம்பந்தர் நின்று பதிகம் பாடிய இடத்தில் உள்ள இறைவனை ஜுரேஸ்வரர் என்று அழைக்கின்றனர். கரோனா என்பது கொள்ளை நோயாக இருந்தாலும் சம்பந்தர் பாட்டு பாடினால் காய்ச்சல் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை சைவ பெருமக்கள் மத்தியில் இன்றும் உள்ளது.