மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருமழபாடியில் உள்ள சிவனைப் பார்த்து அடியார் திருநாவுக்கரசர் பாடியது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு,
”சமயத்தின் பெயரால் சண்டைகளும், சமயத்தின் பெயரால் அரசியலும் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சமயம் அதற்காக வந்ததல்ல. ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ அந்த நினைப்பிற்கு செயல் வடிவம் கொடுப்பதுதான் சமயம்.
இன்றைக்கு விதவிதமான நகைக்கடைகள், அங்கு விதவிதமான அணிகலன்கள், நாளிதழ்களில் அதற்காக பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வருகின்றன. மக்களும் அணிகலன்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நகை வாங்க வேண்டும், உன்னதமான ஆடை வாங்க வேண்டும் என்று சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் ஆசை இறைவனுக்கு இல்லாமலா இருக்கும்?
இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழபாடியில் உள்ள சிவனைப் பார்த்து அடியார் திருநாவுக்கரசர்,
”பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே...” எனப் பாடுகிறார்.
ஆடை, அணிகலன்கள் மீது விருப்பம் கொண்டவர்களாக மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ, இறைவனையும் அதேபோல பாவிக்கிறார் திருநாவுக்கரசர். சராசரி மனிதனின் சிந்தனை பக்தியிலும் எதிரொலிக்கிறது என்றால் அதற்கு பெயர்தான் பக்தி. மனிதர்களிடம் இருந்து அந்நியப்பட்டு போகும் என்றால் பக்தியே கேள்விக்குறியாகிவிடும். மனிதனைப்போல சிந்திப்பதும் மனிதனைப்போல இயங்குவதும்தான் பக்தி. அதைத்தான் தமிழ் பக்தி இலக்கியங்கள் வெளிப்படுத்தின”.