மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பல்லவ மன்னனால் சுண்ணாம்பு நீற்றறையில் திருநாவுக்கரசர் அடைக்கப்பட்டபோது அவர் பாடிய பதிகம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
சமயக்குறவர்களில் முத்தானவர் திருநாவுக்கரசர் என்ற அப்பர். அவர் சைவத்திலிருந்து சமணத்திற்கு தாவி, தன்னுடைய தமக்கையின் வேண்டுதலால் மீண்டும் சைவத்திற்கே மாறினார். நமச்சிவாய நமச்சிவாய என்று திருநாவுக்கரசர் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். தன்னுடைய சாம்ராஜ்யத்தில் அந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது என்று பல்லவ மன்னன் உத்தரவிட்டிருந்தார். திருநாவுக்கரசர் என்ற ஒருவர் அந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியவந்ததும் அவரை என்ன செய்யலாம் என்று மன்னரிடம் சென்று கேட்கிறார்கள். அவரை என்னிடத்தில் அழைத்து வாருங்கள் என்று மன்னர் கட்டளையிடுகிறார்.
திருநாவுக்கரசரை அழைக்க ஆட்கள் வந்தபோது, பல்லவ மன்னன் அழைத்து வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, துறவிக்கு மன்னனும் துரும்புதான். இதைப்போய் அவரிடம் சொல்லுங்கள் என்கிறார். இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த மன்னன், அவரைக் கைது சுண்ணாம்பு நீற்றறையில் போடுங்கள் என உத்தரவிடுகிறார். உடனே அப்பர் சுவாமிகளை கைது செய்து சுண்ணாம்பு நீற்றறையில் போடுகிறார்கள். சுண்ணாம்பு நீற்றறையில் போட்டுவிட்டால் உடம்பெல்லாம் புண் வந்து இவர் இறந்துவிடுவார், நமச்சிவாய மந்திரம் இனி உச்சரிக்கப்படாது என்று மன்னர் நினைத்தார். ஆனால், சுண்ணாம்பு நீற்றறையில் இருந்தபோது அப்பர் சுவாமிகளுக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக, சுண்ணாம்பு நீற்றறைக்குள் இருப்பது, கையில் வீணையை வைத்து வாசித்து அந்த இசையைக் கேட்டால் எவ்வளவு சுகமாக இருக்குமோ தனக்கு அதுபோல சுகமாக இருப்பதாக அப்பர் சுவாமிகள் கூறினார். அதுமட்டுமில்லாமல், மாலை மதியத்தை தரிசித்ததைப்போல, தென்றல் வீசுவதைப்போல, இளவேனில் காலத்தைப்போல உணர்வதாகவும் கூறினார். அதை,
"மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே..." எனப் பாடினார்.
அடக்குமுறை அம்புகள் தன் மீது வந்தபோதும், கைதுசெய்து சுண்ணாம்பு நீற்றறையில் அடைத்தபோதும், "இங்கும் நான் ஈசனைத்தான் பார்க்கிறேன்... அவனுடைய நிழலில்தான் இருக்கிறேன்... எனவே இதை பூலோக சொர்க்கமாக அனுபவிக்க முடிகிறது" என்று அப்பர் சுவாமிகள் கூறினார். எத்தனை துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு இந்தப் பதிகத்தை படித்தால்போதும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் உள்ளது. ஆதிக்கத்தை எதிர்கொள்ள இப்படி ஒரு துணிச்சலும் ஆன்ம பலமும் அப்பர் சுவாமிகளுக்கு இருந்தது. இந்தப் பதிகத்தை பாடி அமைதி பெறாதவர்கள் இல்லை என்கிற அளவிற்கு பைந்தமிழ் நாட்டில் பதிகம் பாடி வாழ்ந்த காலத்தில் முக்கிய இடத்தை இந்தப் பதிகம் பெற்றிருந்தது.