மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருநாவுக்கரசரின் உழவாரப்பணி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
வாழ்க்கை என்பது ஒன்றரை அடியில் பிறந்து ஆறடி வளர்ந்து மண்ணுக்கு உரமாவது அல்ல. நிலத்தில் விளைந்தவற்றை தின்று தீர்த்து கதை முடிப்பது அல்ல. மண் செழிக்க மழை பொழிவதுபோல மனித மனம் செழிக்க பாடிய வள்ளுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்க்கை என்பது வாழ்வாங்கு வாழ்வது என்று பாடினான். இப்படித்தான் வாழவேண்டும் என்று வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர்கள்தான் அருளாளர்கள். இறைவன் மீது கொண்டிருக்கும் ஈடில்லாத பக்தி நம்மை கரை சேர்க்கும் என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள். அதற்காக அடக்குமுறை சட்டத்தை ருசி பார்த்தார்கள். எதையும் தாங்கிக்கொள்ளும் சித்தம் அவர்களிடம் இருந்தது.
சமயக்குறவர்களில் எப்போதும் சிந்திக்கப்பட வேண்டியவர் திருநாவுக்கரசர் என்ற அப்பர். இன்று தமிழ்நாட்டின் திருக்கோவில்களில் உழவாரப்பணி செய்வதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது. க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்து இன்று இந்தியா முழுவதும் தூய்மைப்பணி நடந்துகொண்டுள்ளது. ஆனால், கோவில்களில் பிரசாதத்தை வாங்கி வாயில் போட்டுவிட்டு தூணில் துடைக்கிறார்கள். கோவில்களில் அழுக்கு படிந்திருக்கிறது. கோவில்களின் மதில் சுவரெங்கும் செடியும் கொடியும் படர்ந்திருக்கிறது. இது இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கும் இருந்தது.
80 வயதைத் தாண்டிய பிறகும்கூட திருநாவுக்கரசர் கையில் கருவிகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கோவிலாகச் சென்று செடி, கொடிகளை அகற்றினார். பாசி படர்ந்திருந்த இடத்தில் பாசியை சுத்தப்படுத்தினார். தனியாளாக நின்று கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியை ஆறாம் நூற்றாண்டில் அவர் செய்தார். ஆசாபாசங்களுக்கு அடிபணியாமல், ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமல், எது வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்ற துணிச்சலோடு, இறைவன் மீது வைத்திருந்த ஈடில்லாத நம்பிக்கை என்னை காப்பாற்றும் என்று சொல்லிக்கொண்டு இந்த உழவாரப்பணியை அவர் நாளும் செய்தார். கோவில்கள், வீடுகள் என அனைத்து சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஆறாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவைத்தவர் அப்பர் சுவாமிகள் என்ற திருநாவுக்கரசர். வாருங்கள் என்று யாரையும் கூவி அழைக்கவில்லை, இதைச் செய்யுங்கள் என்று யாருக்கும் கட்டளை இடவில்லை. வயது முதிர்ந்த நிலையிலும், தன்னுடைய உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் அவரே செய்தார்.
சமயக்குறவர்களில் திருநாவுக்கரசர்தான் அதிகம் மதிக்கப்படக்கூடியவராகவும் இருக்கிறார். திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் இருக்கிறார். மதுரையில் இருந்த திருஞானசம்மந்தர் திருப்பூந்துருத்திக்கு வருகிறார். பல்லக்கில் அமரவைத்து இன்றைக்கு கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பைபோல பிரம்மாண்டமான வரவேற்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. பல்லக்கின் உச்சியில் இருந்த திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் இங்குதானே முகாம் போட்டிருந்தார், அவர் எங்கே என்று கேட்டார். பல்லக்கை சுமந்துகொண்டு வருபவர்களில் ஒருவராக இருந்த திருநாவுக்கரசர், இங்குற்றேன் என்று பதில் சொல்கிறார். அத்தனை வயதான பெரியவர், சின்னஞ்சிறு திருநாவுக்கரசரை பல்லக்கில் வைத்து சுமந்தது மதிக்கப்பட வேண்டியவரை மதிக்க வேண்டும், துதிக்கப்பட வேண்டியவரை துதிக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தைக் காட்டுகிறது. இப்படியொரு வாழ்ககையை திருநாவுக்கரசர் வாழ்ந்ததை பெரிய புராணத்தில் பதிவு செய்துள்ளார்கள். வரலாற்றிலும் செய்தியாக இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் மீண்டும் உழவாரப்பணிகள் செய்வதற்கான முன்னெடுப்பை அரசு எடுத்துள்ளது என்றால் அதற்கு வாசல் திறந்து வைத்தவர் திருநாவுக்கரசர் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.