ஒருவன் ஒருத்தியை மணம் முடிப்பது என்பது ஒரு மணமாகும். ஒரு துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ, திட்டமிட்ட லட்சியமும் தெளிவான பாதையும் அவசியம். குடும்பம் என்பது சமூகத்தின் உறுப்பாகும். கணவனும் மனைவியும் அதைத் தாங்கும் தூண்களாவர்.வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்களுக்கு தனித்தனி குணாதிசயங்கள் இருந்தாலும் தத்தமது இணையின் இயல்புகளைப் புரிந்துகொண்டு, மற்றவரின் எண்ணங்களோடு இணக்கமாகச் செல்ல முயல்வதன் மூலம் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். கணவன்- மனைவி உறவில் இடைவெளி தோன்றாவிட்டால், மனதில் மற்றொருவருக்கு இடமும் தோன்றாது.பிறன்மனை நோக்காது வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள முடியும்.ஜோதிடரீதியாக, ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கும் சந்திரா லக்னத்திற்கும் 7-ஆம் பாவம் களத்திர ஸ்தானமாகும். 2-ஆம் வீடு குடும்ப ஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7-ஆம் அதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருப்பதும், அப்படியே 7-ஆம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும்- குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.
ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனான சுக்கிரன் மிக முக்கிய பங்கு வகிப்பதால், அவர் கிரகச் சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில் அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பதும் நல்லது. குருவின் பார்வையானது 7-ஆம் வீட்டிற்கோ, 7-ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் சிறப்பு. ஒருவரது ஜாதகத்தில் மேற்கூறியவாறு கிரக அமைப்புகள் இருந்தால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி, எந்தவித சலனங்களுமின்றி வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் இருக்கும்.7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச்சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அந்த கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவ கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகின்றன. இப்படி அமையப் பெற்ற பாவகிரங்களின் தசாபுக்தி நடைபெறுகின்றபோது ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாக்குவதில்லை.சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும் கூடி ஒருவரின் ஜாதகத்தில் எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாகும் என்ற ஒரு கருத்தும் உண்டு. எனவே செவ்வாய், சூரியன் சேர்க்கை இல்லாமலிருப்பது நல்லது.
ஒருவரது ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகள் கிரகச் சேர்க்கையுடன் இருந்தாலும், 2, 7-ஆம் அதிபதிகள் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் ஒரே திருமணம்தான் நடைபெறும்.ஒருவரது ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகள் கிரகச் சேர்க்கையுடன் இருந்தாலும், திருமணத்திற்குப்பிறகு வரக்கூடிய தசாபுக்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. லக்னத்திற்கு நட்பு கிரகங்களுடைய தசாபுக்தியாக இருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் தசாபுக்தியாக இருந்தாலும், சுபகிரகங்களின் தசாபுக்தியாக இருந்தாலும் ஒரே தாரம்தான் அமையும்.ஒருவரது ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகளுடன் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இணைந்திருந்தால், சில அனுபவமற்ற ஜோதிடர்கள் அந்த ஜாதகருக்கு பல திருமணம் நடைபெறும் என்று கூறி, பலருக்கு கைகூடவேண்டிய திருமணத்தைக்கூட தடுத்துவிடுகின்றனர்.ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியுடன் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இணைந்திருந்து ஏக தாரத்தோடு வாழ்ந்தவர்கள் பலர் உள்ளனர்.7-ஆம் அதிபதியுடன் பாவ கிரகங்கள் இணைந்திருந்தால் பல திருமணம் நடைபெறும் என்ற கூறிவிடமுடியாது. 7-ஆம் அதிபதியுடன் இணைந்த பாவ கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறுகின்றபோது ஒற்றுமைக்குறைவுகள் ஏற்படும். வேறு சில தொடர்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பதால், அக்காலங்களில் தேவையற்ற நட்புகளிடம் கவனமாக இருப்பது நல்லது.ஒருவர் ஜாதகத்தில் தோஷம் இருந்தால், தோஷத்தை ஏற்படுத்தும் கிரகங்களின் தசாபுக்தி நடக்கும்போது மணவாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு, பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஜாதகருக்கு, அதற்கு ஈடுகொடுக்கும் ஜாதகமாகப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பது நல்லது. பத்துவிதப் பொருத்தங்களில் ஐந்துக்கு மேல் இருந்தால் திருமணம் செய்யலாம் என்னும் கருத்து இருந்தாலும், ஆண்- பெண் இருவருக்கும் ராசியாதிபதிகள் ஒருவராக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்துவைப்பது சிறப்பு. 12 ராசிகளில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு ராசிகளும் ஒருவருக்கொருவர் நட்பு ராசிகளாகும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு ராசிகளும் ஒருவருக்கொருவர் நட்பு ராசிகளாகும். இதுமட்டுமின்றி, இருவருடைய லக்னமும் நண்பர்களாக அமைந்தால் நல்லது. திருமணப் பொருத்தத்தில் வசியப் பொருத்தம் கூடிவந்தால் தம்பதிகள் அன்யோன்ய வசீகரத்துடன் இன்புற்று வாழ்வார்கள். ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம் இருக்கும் ஜாதகமாகவோ, இருவருக்கும் லக்னாதிபதி நட்பு கிரகமாக இருக்கும் ஜாதகமாகவோ பார்த்துத் திருமணம் செய்து வைத்தால், எத்தனைப் பிரச்சினைகள், சண்டைகள் வந்தாலும் மனதளவில் ஒன்றுபடக்கூடிய அமைப்பு நிச்சயமாக இருக்கும்.