கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த தொழில் ஏற்றது என்ற தலைப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரக்கூடியது. வெற்றியை வசமாக்கவும் தோல்வியை தோற்கடிக்கவும் ஜோதிடத்தில் வழி உண்டா என்றால், உண்டு. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
படித்த படிப்பிற்கு சம்மந்தமில்லாத வேலையைத்தான் இன்று பலரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல சம்பளம் கிடைத்தாலும் மனத்திருப்தி இல்லாத வேலையைத்தான் பலரும் செய்கிறார்கள். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற தொழில்கள் என சில தொழில்கள் உள்ளன.
மேஷ ராசியினர் இயல்பிலேயே போர்க்குணம் கொண்டவர்கள். உடல் வலிமையும் மனவலிமையும் அவர்களுக்கு அதிகம். செவ்வாய் பகவான் ராசியின் அதிபதி. அந்த ராசிக்கான குணாதிசயப்படி, இவர்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். விளையாட்டுத்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் பணி புரிந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷப ராசி ஆடம்பரத்தை தரக்கூடிய சுக்ர பகவானின் ராசி. இவர்கள் எழுத்தாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் நல்ல முன்னேற்றம் காண முடியும். இந்த ராசிக்காரர்களுக்கு எழுத்துத்துறையில்தான் ஆறுதலும் அமைதியும் கிடைக்கும்.
மிதுன ராசி புதனின் ராசி. நல்ல நகைச்சுவை உணர்வுடைய இந்த ராசிக்காரர்கள் செய்திப்பரிமாற்றத்தில் முன்னேற்றம் காணக்கூடியவர்கள். இவர்கள் பொதுஜனத் தொடர்பு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையிலும் ஏஜென்ஸி மாதிரியான வியாபாரத்துரையிலும் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி சந்திரனை அதிபதியாக கொண்ட ராசி. இவர்களுக்கு பிறர் மனதை வசியப்படுத்தக்கூடிய திறமை இருக்கும். இவர்களுக்கு ஆசிரியர் துறை, உணவு, வாசனைப்பொருட்கள் தாயாரித்தல், புகைப்படக் கலை ஆகிய துறைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்ம ராசி சூரிய பகவானை அதிபதியாக கொண்ட ராசி. ஆளுமைத்திறன் அதிகம் கொண்ட இவர்கள் அதிக கௌரவம் எதிர்பார்ப்பார்கள். நிதி நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், அரசியலிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த ராசியின் அதிபதியான சூரிய பகவான் அரச ஆதிக்கத்தை தரக்கூடியது.
கன்னி ராசி புதனை அதிபதியாகக் கொண்ட ராசி. புத்திக்கூர்மை உடைய இவர்கள், நல்ல ஆலோசனைகள் வழங்கக்கூடியவர்கள். மருத்துவத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு இவர்களுக்கு பிரகாசமாக இருக்கும்.
துலாம் ராசியினர் நிர்வாகத்தை சிறப்பாக கையாளக்கூடியவர்கள். இவர்கள் நீதித்துறையில் சிறந்து விளங்குவார்கள். அதேபோல நேர்மையான வியாபாரிகளாகவும் இருப்பார்கள்.
விருச்சிக ராசி செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி. கடின உழைப்பாளிகளான இவர்களுக்கு மருத்துவத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கவும், நல்ல பதவிகளுக்கு வரவும் வாய்ப்புண்டு. இது தவிர, மின்சாரத்துறை, அணுசக்தித்துறை போன்ற சக்தி மிகுந்த துறைகளில் முன்னேற்றம் காணவும் நல்ல வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி குருவை அதிபதியாகக் கொண்ட ராசி. இந்த ராசிக்காரர்கள் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற துறைகளில் சாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
மகர ராசி சனி பகவானின் பரிபூரண அருள்பெற்ற ராசி. இவர்களுக்கு சொந்தத் தொழில் ஏற்றது. வியாபாரத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் சிறந்த சமூகத்தலைவர்களாகவும் இருப்பார்கள்.
கும்ப ராசி சனியின் வீடு. இவர்கள் அனைவருடனும் எளிதாக பழகக் கூடியவர்கள். சமுதாயத்தை அனுசரித்து செல்லகூடியவர்கள். கல்வித்துறை, விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு உண்டு.
மீன ராசி குருவின் பரிபூரண அருளைப் பெற்ற ராசி. இந்த ராசிக்காரர்கள் கற்பனையில் வல்லவர்கள். இவர்களிடம் உள்ள பல விதமான கற்பனைகள் கைத்தொழில் கலைஞர்களாக இவர்களை மாற்றிவிடும். ஓவியம், கைதொழில் போன்ற நுனுக்கமான அழகு தரக்கூடிய கலைகளில் மீன ராசிக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.