Skip to main content

செல்வம் பெருக்கும் லட்சுமி பூஜை!

Published on 07/11/2018 | Edited on 08/11/2018

தீபாவளிக்கு மறுநாள் இன்று (7-11-2018) மகாலட்சுமியை வணங்கவேண்டும். (வட இந்தியாவில் இன்றுதான் தீபாவளி). அப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். அந்தநாளை காளராத்திரி என்றும், நிஷாராத்திரி என்றும் குறிப்பிடுவார்கள்.

சூரியன், சந்திரன் இணையும் அந்தநாளில் அன்னை மகாலட்சுமியை வணங்கினால், ஒருவர் தன் வாழ்க்கையிலிருக்கும் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம்.

அமாவாசையன்று காலையில் குளித்து முடித்து, வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டவேண்டும். வீடு மற்றும் பூஜையறையை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பூஜையறையில் சிவப்புநிறத் துணியை விரித்து, அதன்மீது நாம் வழிபடும் எல்லா கடவுள்களையும் வைக்கவேண்டும். லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் ஆகியோரின் படங்களை வைக்கவேண்டும். லட்சுமிக்கு தாமரை அல்லது மல்லிகை அல்லது சிவப்பு மலரை வைத்து அலங்காரம் செய்யவேண்டும்.

lakshmipooja

பூஜையறையில் கலசத்தில் நீர் பிடித்து வைத்து, கலசத்தின்மீது மாவிலை அல்லது வெற்றிலையை வைத்து, அதன்மீது ஒரு முழுத்தேங்காயை வைக்கவேண்டும்.

அன்னை லட்சுமிக்கு பிரசாதமாக ஐந்துவிதப் பழங்களை வைத்து, பால்கோவா அல்லது ஏதாவது இனிப்பை வைக்கவேண்டும். வெள்ளிக்காசுகளையும் வைக்கலாம். வாசனை திரவியம், கண்மை, குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை வைக்கவேண்டும்.

அனைத்துக் கடவுள்களுக்கும் பொட்டுவைத்து ஒரு நெய் தீபத்தையும் ஒரு எண்ணெய் தீபத்தையும் ஏற்றி வைக்கவேண்டும். மகாலட்சுமியின் ஸ்ரீசூக்தம் அல்லது மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்கலாம்.

பூஜையை ஸ்திர லக்னமான ரிஷபம் அல்லது சிம்ம லக்னத்தில் செய்தால் நல்லது. அல்லது மாலை சூரியன் மறையும் நேரத்தில் (கோதாளி- பசுக்கள் வீடு திரும்பும் நேரம்) பூஜையைச் செய்யவேண்டும். பூஜை செய்பவர் வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.

வீட்டின் வாசலில் தீபம் ஏற்றிவைத்து, இரவில் வீட்டிற்கு வெளியே கால்வாய் இருந்தால், அங்கும் ஒரு தீபத்தை ஏற்றிவைக்க வேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக அல்லது நீசமாக அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால் அவருக்கு லட்சுமியின் அருள் கிடைக்காது. மனைவிக்கு உடல்நலக்குறைவு இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் தோன்றும். கடன் தொல்லைகள் இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் சூரியன், செவ்வாயுடன் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், சிலருக்கு மனநோய் இருக்கும். சிலருக்கு உணவு ஜீரணமாகாது. கணவனுக்கும் மனைவிக்கும் கருத்துவேறுபாடு உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், அதை பாவகிரகம் பார்த்தால் அந்த வீட்டில் எந்த சுபகாரியம் நடக்கும் போதும் தடைகள் உண்டாகிக்கொண்டே யிருக்கும். சிலருக்கு நோயின் பாதிப்பு இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 4-க்குரிய கிரகம் பலவீனமாக அல்லது நீசமாக அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அந்த வீட்டில் நல்ல காரியங்கள் நடக்காது. மகிழ்ச்சி இருக்காது. நல்ல செயல்கள் நடக்கும்போது தடைகள் உண்டாகும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, செவ்வாய் பலவீனமாக இருந்து, 9-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகரின் வாழ்க்கையின் முதற்பகுதியில் பிரச்சினைகள் தோன்றும். சந்தோஷம் இருக்காது. எல்லா விஷயங்களிலும் தடைகள் உண்டாகும்.

ஒரு மனிதரின் ஜாதகத்தில் சூரியன், சனி, செவ்வாய் அல்லது சூரியன், சனி, ராகு 12-ல் இருந்தால், வீட்டில் மகிழ்ச்சியே இருக்காது. பணமிருந்தாலும் நிம்மதி இருக்காது. தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உறவு சரியாக இருக்காது. பணத்திற்காக பல பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.

ஜாதகத்தில் குரு நீசமாக அல்லது பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் பிறந்த லக்னத்திற்கு குரு பாதகாதிபதியாக இருந்தால், குருவின் தசை நடக்கும்போது அவர் பல பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்வார்.

இவர்கள் எல்லாரும் தாய் லட்சுமியை வழிபடவேண்டும். அமாவாசையன்று இரவில் பூஜை செய்யவேண்டும். பூஜை செய்பவரின் முகம் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருக்கவேண்டும். அவர் கள் அந்த நாளன்று மகாலட்சுமியின்- "ஓம் ரீம் ஸ்ரீம்' அல்லது "ஓம் ரீம் ஸ்ரீம் க்ளீம்' என்னும் மந்திரத்தை பத்து மாலை (108 ஷ் 10) முறை கூறவேண்டும்.

தந்தை- மகனுக்குப் பிரச்சினை இருந்தால் ஜாதகத்தில் சூரியன் சரியில்லையென்று அர்த்தம்.

ஒரு ஜாதகத்தில் குரு பலவீனமாக அல்லது நீசமாக இருந்தால் அவர் தன் தாத்தாவைப் பார்க்காமல் இருப்பார். அல்லது தாத்தா ஏற்கெனவே இறந்திருப்பார். அதனால் அவருக்கு குரு தோஷம் இருக்கிறதென்று அர்த்தம். பணக்காரராக இருந்தாலும், பல சிக்கல்களிலும் அவர் மாட்டிக்கொண்டி ருப்பார். அவர்கள் அமாவாசையன்று மாலை வேளையில் பூந்தி, லட்டு ஆகியவற்றைப் பிரசாதமாக வைத்து லட்சுமியை வழிபட வேண்டும். பசுவுக்கு வெல்லம் அல்லது மஞ்சள் வாழைப்பழத்தைத் தரவேண்டும்.

பூஜை செய்யும்போது, வீட்டில் இருள் இருக்கக்கூடாது. பூஜை முடிந்தபிறகு, வீட்டிலிருக்கும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும். மறுநாள் காலையில் கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் தேங்காயை ஒரு சிவப்புநிறத் துணியில் சுற்றி, அதை பூஜையறையில் ஒரு ஆணியில் தொங்கவிட வேண்டும். அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அடுத்த வருடம் தீபாவளி வரும்போது, அந்த தேங்காயை ஆறு, குளம், கடலில் விட்டுவிட்டு வரவேண்டும்.

இந்த லட்சுமி பூஜையை அமாவாசையன்று செய்பவர்கள் தோஷங்கள் நீங்கி, சந்தோஷமாக இருப்பார்கள்.
 

செல்: 98401 11534