சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கோயில் வளாகத்தின் உள்ளேயே நடைபெற்ற தேரோட்டம். தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித் திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழா தினந்தோறும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வீதி உலா நடைபெற்று வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை ஆயிரம் கால் மண்டபத்திற்கு கொண்டு வந்த தீட்சிதர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து அருளினர். சரியாக 8.00 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் முன்பு சாலையில் பெண்கள் மா கோலம் இட்டும், சிவனடியார்கள் நடனமாடியும் வரவேற்றனர். தேர் நான்கு மாட வீதிகளை இன்று மலைக்குள் வலம் வந்து நிலையை அடையும்.
ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது.