திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்தக் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வழிபாடு செய்வார்கள்.
இக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இவ்வருடம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 6 மணிமுதல் கோவிலில் பெண்கள் கூட்டம் அம்மனை தரிசிக்க அலைமோதியது. காலை 9 மணியளவில் கர்ப்பிணி பெண்கள் கோவிலின் முன்பு உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சுமங்கலி பெண்கள் அம்மனை வணங்கிவிட்டு கையில் வேம்பு இலை நரம்பு கொண்டு கட்டிவிட்டனர். கோவில் குருக்கள் அமாவாசை, அம்மனுக்கு படைத்த வளையல்களை கர்ப்பிணி பெண்கள் கையில் அணிவித்தார். அதன்பிறகு பெண்கள் அங்குள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வளையல் அணிவித்தனர். அம்மனுக்கு தீபாராதனை காண்பித்த பின்பு கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் அட்சதை போட்டு வாழ்த்தினார்கள்.
இதுகுறித்து கோவில் குருக்கள் அமாவாசை கூறும்போது, “குழந்தை வரம் வேண்டுவோர்களுக்கு அம்மன் வயிற்றில் கட்டிய கம்புபயிரை பிரசாதமாக கொடுக்கிறோம். குழந்தை பிறந்தவுடன் அவர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு செல்கின்றனர்” என்றார்.