Skip to main content

சோம்பல் உடல்நலத்துக்குத் தீங்கானது: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
seythi34


போதுமான உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாததால் மட்டும் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் உலகளவில் மரணமடைகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் நடந்ததப்பட்ட ஆய்வொன்றில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் பிரதான மருத்துவரான ரெஜினா குத்தோல்ட், இளம் வயதினரில் கால் பங்குக்கும் அதிகமானோர், உடலுக்குத் தேவையான அளவு உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை என்கிறார்.

சும்மா இருப்பதே சுகம் என சித்தர்களும் ஞானிகளும் சொல்லலாம். ஆனால் நவீன மருத்துவம் அப்படிச் சொல்ல மறுக்கிறது. உழைப்பே ஆரோக்கியம் என்பதுதான் நவீன மருத்துவத்தின் மந்திரச் சொல். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிதமான உடற்பயிற்சியெனில் இரண்டரை மணி நேரமும், தீவிரமான உடற்பயிற்சியெனில் ஒரு மணி நேரம் 15 நிமிடமும் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். குறைந்த வருமானமுள்ள நாடுகளில் வேறு வழியின்றி பிழைப்புக்காக உடலுழைப்பு சார்ந்த பணிகளில் பெரும்பாலோர் ஈடுபடுகின்றனர். இந்நாடுகளில் போதுமான உடலுழைப்பு இல்லாதவர்கள் 16 சதவிகிதம் என்றால், அதிக வருமானமுள்ள நாடுகளில் உடலுழைப்பு இல்லாதோர் சதவிகிதம் 37 சதவிகிதமாக இருக்கிறது.

இந்தியாவில் ஆண்களைவிட பெண்களிடம் உடலுழைப்புவிகிதம் குறைவாக காணப்படுகிறது. உடலுழைப்பு இல்லாத ஆண்களின் விகிதம் 25 என்றால், பெண்களின் சதவிகிதம் 44 என்பது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. உடலுழைப்பின்மை பல சமயங்களில் இதய நோய், டைப் 2 டயாபடீஸ், சில வகை புற்றுநோய், மனநலக்குறைபாடுகளுக்கு காரணமாகிறது. உடலுழைப்பில்லாத காரணத்தால் உலக அளவில் நான்குக்கு ஒருவர் என்ற கணக்கில் மரணமடைவதாகக் கணக்கிடுகின்றனர். மது, சிகரெட் பழக்கத்துக்கு சமமாக உயிர்வாங்கும் உடலுழைப்பின்மை விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்போம்.

 

சார்ந்த செய்திகள்