பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் இருந்து வருகிறார். இந்தச்சூழலில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், இம்ரான்கானின் "திறமையற்ற மற்றும் முறைகேடான" அரசாங்கத்தை தேசத்தில் இருந்து அகற்ற, அந்தநாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி மார்ச் 23 ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்தநிலையில், மக்களிடம் தொலைபேசி வாயிலாக உரையாடும் நிகழ்ச்சி ஒன்றில், இம்ரான்கானிடம் இந்த பேரணி குறித்து கேள்வியெழுப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், "அவர்களது நடவடிக்கை தோல்வியடையும். நான் தெருவில் இறங்கினால், நீங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒளிந்து கொள்வதற்கு இடமிருக்காது. பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நான் மேலும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.