அமெரிக்காவில் தனிநபர்கள் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை வைத்திருக்க அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம் அனுமதி கொடுத்திருந்தாலும் இதனால் பல துப்பாக்கி சூடு சம்பவங்களால் பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்கு பைக்கில் வந்த 18 வயது கொண்ட இளைஞன் பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக சுட்டதில் பள்ளி மாணவர்கள் 18 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா இன்று செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஜனநாயக கட்சி எம்பிக்கள், குடியரசு கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் முழு வடிவம் பெற இருக்கும் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.