ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தான் விரைவில் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன.
அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன. இந்தச் சூழலில், வரும் 20ஆம் தேதியன்று தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கவுள்ளதாக ரஷ்யா நேற்று முன்தினம் (07.10.2021) அறிவித்தது.
இந்தநிலையில், தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் ரஷ்யாவை அமெரிக்கா முந்திக்கொண்டுள்ளது. ரஷ்யா வரும் 20ஆம் தேதி தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் குழு ஒன்று, தலிபான்களின் மூத்த பிரதிநிதிகளை கத்தார் தலைநகர் தோஹாவில் சந்தித்து பேசவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகளை மதிக்கவும், பரந்த ஆதரவுடன் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கவும் தலிபான்களை நாங்கள் வலியுறுத்துவோம். ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார பாதிப்பையும், சாத்தியமான மானுட நெருக்கடியையும் எதிர்கொள்ளும் நிலையில், தேவையான பகுதிகளுக்கு உதவி செய்ய மானுடம் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் நாங்கள் வலியுறுத்துவோம். தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிப்பதற்கும் இந்த பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. எந்தவொரு சட்ட அங்கீகாரத்தையும் தலிபான்கள் தங்கள் செயலின் மூலமாகவே பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.