கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பலரும் வீடுகளில் முடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கரோனாவின் தாக்கம் முழுவதுமாக குறையாத காரணத்தால் குழந்தைகளுக்குப் பள்ளிகளைத் திறப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பள்ளிகள் திறக்காததால் இன்றுவரை ஆன்லைன் வகுப்புகளை அடிப்படையாகக் கொண்டே பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. மேலும், இன்றைய சூழலில் அலுவலக வேலை என்றாலும் சரி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் என்றாலும் சரி அனைத்துமே டிஜிட்டல் சேவையை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
பொழுதை வீணாக கழிப்பார்கள் என்ற எண்ணத்தில் பொதுவாகவே குழந்தைகளிடம் நாம் மொபைல் ஃபோனை கொடுக்க மாட்டோம். ஆனால் இன்று ஆன்லைன் வகுப்புகளுக்காக நாமே நமது குழந்தைகளிடம் மொபைல் ஃபோனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் மொபைல் ஃபோன்கள், பிற மின்சாதன பொருட்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், வேறு வகையிலான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது ஸ்மார்ட் ஃபோன் வெடித்துச் சிதறியதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார். வியட்நாம் நாட்டின் நிகே அன் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதாகும் 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.
அந்த மாணவர் மொபைலை சார்ஜில் போட்டவாறு, காதுகளில் இயர் ஃபோனை மாட்டி பாடங்களைக் கவனித்து வந்தபோது திடீரென மாலை 4 மணியளவில் அந்த மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடால் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தினால் அந்த மாணவரின் உடையில் தீப்பற்றி எரிந்திருக்கிறது. காயத்தில் தவித்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின், உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாம் டென் மாவட்டத்தில் கடந்த மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால், வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் பாடம் நடத்திவருகின்றனர். இந்நிலையில்தான் இந்த விபத்தில் மாணவர் உயிரிழந்திருக்கிறார்.