ஆப்கானிஸ்தானில் தங்களது இடைக்கால அரசை நிறுவியுள்ள தலிபான்கள், முகமது ஹசன் அகுந்த்தை ஆப்கான் பிரதமராகவும், தங்கள் இயக்கத்தின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதரை துணை பிரதமராகவும் அறிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கும், தனி குழுவாக இருந்து பின்னர் தலிபான்களுடன் இணைந்த ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்தநிலையில் முல்லா அப்துல் கனி பராதருக்கும், ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் மோதல் நடைபெற்றதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது தலிபான்கள் மறுத்துள்ளனர். தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தான் இறந்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்து அப்துல் கனி பராதரே ஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் தலிபான்கள், அப்துல் கனி பராதர் காந்தகாரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருப்பது போல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் எந்த சர்வதேச ஊடகத்தாலும் அந்த விடீயோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.