சிங்கப்பூர் நாட்டின் மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு, ஒரு வினோதமான கடற்வாழ் உயிரினம் தென்பட்டது. கூரிய பற்கள், பெரிய தாடைகளோடு இருந்த அதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலில், அது முதலையாக இருக்கும் என நினைத்த மக்கள், அதன் அருகில் செல்லவே நடுங்கினர். இதனைத் தொடர்ந்து அந்த நீர்த்தேக்கத்தில் நகர நீர் நிறுவனத்தின் அதிகாரிகளும், தேசியப் பூங்காக்கள் வாரிய அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர்.
இதில் அந்த உயிரினம் முதலை அல்லவென்றும், முதலைபோல் இருக்கும் மீன்வகையான முதலை மீன் வகையைச் சேர்ந்தது என்றும் தெரியவந்தது. இந்த முதலை மீன், அந்தப் பகுதியில் வாழும் உயிரினம் அல்ல என்றும், 10,000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த முதலை மீனை வீட்டில் வளர்த்தவர்கள், பெரிய அளவில் வளர்த்ததால் அதனை நீரில் விட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த மீன் வேட்டையாடி உண்ணும் தன்மைகொண்டது. எனவே இது அந்தப் பகுதியின் சுழலியலைப் பாதிக்கலாம் என்பதால், மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் இருந்து மாற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த முதலை மீன் உலகின் மிகவும் பழமையான உயிரினமாகும். இது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகிறது.