சவுதியை அரேபியாவை சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் அந்தநாட்டின் மன்னரையும், இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பல சர்ச்சைகள் ஆதாரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு, சவுதி அரேபியா அரசு கொலை செய்ததை ஒப்புகொண்டது. அதன் பின் அதுதொடர்பாக 18 பேரை சவுதி அரேபியா கைது செய்தது. மேலும் அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது.
ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இந்த கொலையில் பங்கு இருப்பதை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை கணித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் இதனை சவுதி அரசு மறுத்தது.
இந்தநிலையில் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைது செய்ய அல்லது கொலை செய்ய, துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு நடவடிக்கைக்கு சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் கருதுகிறோம். அவர் பச்சைக்கொடி காட்டாமல், இந்த கொலை நடக்க சாத்தியமில்லை. ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விதம், அதிருப்தியாளர்களை அமைதியாக்க, வன்முறைக்கு ஆதரவளிக்கும் இளவரசரின் நடவடிக்கைக்கு பொருந்துவது போல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு, சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.