இலங்கையில் அரசுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
இதற்கிடையே, இன்றியமையாதப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. தலைநகர் கொழும்புவில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல்துறை கலைக்க முயன்றது. மாணவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைக்க முயன்றனர்.
இதனிடையே, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கொழும்பு, நுவரெலி, வவுனியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் பல மணி நேரம் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சமையல் எரிவாயுவுக்கு காத்திருந்தும் கிடைக்காததால் முகவர்களுடன் சண்டையிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. வவுனியாவில் ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் பெட்ரோல் கிடைக்காததால், ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வரிசையில் காத்திருந்தனர்.
தட்டுப்பாட்டைக் கண்டித்து கொழும்புவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் எரிபொருளுக்காக பல மணி நேரம் காத்திருந்த மக்களிடையே தள்ளுமுள்ளு, சண்டை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருளுக்காக காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.