
வளைகுடா நாடுகளுள் ஒன்றான சவுதியில் தற்போது மன்னராட்சி முறை நடந்து வருகிறது. அந்த நாட்டின் இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற நாளில் இருந்து அந்நாடு மற்றும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதே சமயத்தில் மற்றொரு புறம் அவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்பி வருகின்றன. அந்தவகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
எனினும் அந்த நாட்டு அரசு இதனைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த மன்னர் அப்துல்லாவை இளவரசர் பதவிக்காக, முகமது பின் சல்மான் கொலை செய்ய முயற்சி செய்தார் என அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கூறியிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் புலனாய்வு அதிகாரி அல்ஜாப்ரி, சவுதியில் இருந்து தப்பித்து கனடாவில் வசித்து வருகிறார். அவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகத்தில் அளித்துள்ள பேட்டியில், இளவரசர் குறித்து பல்வேறு கருத்துகளைத் துணிச்சலாகப் பகிர்ந்துள்ளார்.
நேர்காணலில் அவர் கூறியதாவது, “சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் உள்ளது. மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காகக் கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷ்யாவில் இருந்து விஷம் பொருத்தப்பட்ட மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைக்குலுக்கி மன்னரைக் கொல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார். அந்த நேரத்தில் , இளவரசர் முகமது பின் சல்மான் எந்தவித அதிகாரத்திலும் இல்லை. எனினும் தனது தந்தையை அரியணையில் வைப்பதற்காக மன்னரைக் கொல்ல இவ்வாறான திட்டங்களைத் தீட்டினார். இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதியாகமாட்டார்” எனக் கூறினார்.