உலகம் முழுவதும் கரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. பல நாடுகள் இன்னமும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றன. பிரிட்டனில் கரோனா ஊரடங்கு இன்னமும் அமலில் இருப்பதால், பலரும் அங்கு ஆன்லைன் ஆர்டர் செய்துதான் உணவு எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், பிரிட்டன்வாசி ஒருவர் கடந்த 21-ஆம் தேதி அன்று உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து, வந்த உணவைப் பிரித்துப் பார்த்தபோது அவருக்கு காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.
பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற 'ஹலோ ஃபிரஷ்' எனும் உணவு டெலிவரி நிறுவனத்தில், ஆலிவர் மெக்மேனஸ் எனும் நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு வந்த உணவுடன் 'கோக்' பாட்டிலில் சிறுநீர் நிரப்பப் பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், இதுகுறித்து ட்விட்டரில் அந்த நிறுவனத்தை டேக் செய்து கேள்வியெழுப்பியுள்ளார். அதில், "நான் மிகவும் எளிமையாகக் கேட்கிறேன். நான் ஏன் எனது உணவு ஆர்டருடன் யாரோ ஒருவரின் சிறுநீர் நிரப்பிய பாட்டிலைப் பெற்றேன். இதுகுறித்து உங்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு, அந்த 'கோக்' பாட்டில் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இது சமூக ஊடங்கங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர். இதையொட்டி கருத்துத் தெரிவித்த ஹலோ ஃபிரஷ் நிறுவனம், "இதுகுறித்து நாங்கள் எவ்வளவு வருந்துகிறோம் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தயவுசெய்து இதுகுறித்த செய்தியை அனுப்பினால், விரைவாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளது.