ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமைப்பு செய்து, அதை தன்னுடன் இணைத்து கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என கூறி வருகிறது. ஆனால் இதனை மற்ற நாடுகள் நம்பவில்லை. உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என நம்புவதாகவும், உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யர்கள் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திப்பார்கள்" எனவும் தெரிவித்தார். இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள தங்கள் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை பிரிட்டன் திரும்ப அழைத்துள்ளது. தூதரகரத்தில் பணியாற்றும் பாதி ஊழியர்கள் நாட்டிற்கு திரும்புவார்கள் என பிரிட்டன் கூறியுள்ளது.
அதேபோல் அமெரிக்கா, எந்த நேரத்திலும் படையெடுப்பு நிகழலாம் என கூறி, தனது தூதரக ஊழியர்களின் உறவினர்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே டென்மார்க், ஸ்பெயின், பல்கேரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நேட்டோ நாடுகள், உக்ரைனை பாதுகாக்கும் விதமாக கிழக்கு ஐரோப்பாவிற்கு போர்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன. ஏற்கனவே அமெரிக்கா, உக்ரைனுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.