விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு மென்பொருள்கள் மற்றும் ஆப் தயாரித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்ட்ராய்டு வருகைக்கு பின்னர் அதற்கான ஆப்களையும் தயாரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் செய்தி வாசிக்க பிடிக்காதவர்களுக்காக, அதனை காதால் கேட்டுக்கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 'ஹம்மிங் பேர்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, நாம் எது சம்பந்தமான செய்திகளை அதிகமாக பார்க்கிறோம் என்பதை சேமித்து அதன் அடிப்படையில் நமக்கான செய்திகளை தரும். மேலும் நாம் விரும்பும் செய்திகளை மீண்டும் கேட்கவும், வேண்டாத செய்திகளை ஸ்கிப் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 28 மொழிகளில் செய்தியை தரும் இந்த செயலி முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம்தான் இதே போன்ற செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் செய்திகளை கேட்கும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. தற்பொழுது அதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் இந்த செயலியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.