உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ரஷ்யாவிலும் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், ரஷ்யாவில் இன்று (28.10.2021) மட்டும் 40,096 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது, மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,159 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் கரோனாவால் ஒரேநாளில் இத்தனை உயிரழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறையாகும்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனையடுத்து மாஸ்கோவில் இன்றிலிருந்து 11 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கிற்கான இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மருந்தகங்கள், சூப்பர் மார்கெட்டுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதற்கிடையே மாஸ்கோவைப் போல் வேறு சில மாகாணங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே ரஷ்ய அரசு, கரோனாவைக் கட்டுப்படுத்த வரும் 30ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய தேசிய விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் கரோனா பரவலுக்கு மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததே காரணம் என கூறப்படுகிறது. ரஷ்ய மக்களில் 32 சதவீதம் பேரே இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.