மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு எதிர் நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி வெளியிட்டு வருகிறார். அண்மையில் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, 'சர்வாதிகாரிகளுக்கு திரைப்பட இயக்குநர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டிருந்தார். இதே விழாவில் உக்ரைனில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து, பெண் ஒருவர் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரை குறிக்கும் வகையில் ரஷ்ய ராணுவப்படையினர் பயன்படுத்தி வந்த 'V' , 'Z' ஆகிய எழுத்துகளுக்கு அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தடைவிதித்துள்ளார். கல்வி மற்றும் வரலாற்று நோக்கங்களுக்கு மட்டும் இந்த இரண்டு எழுத்துக்களை பயன்படுத்தலாம் என்றும் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.