அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் கேபிடல். இக்கட்டடத்தை நோக்கி வேகமாக காரை ஓட்டிவந்த ஒருவர், அங்கு இருந்த பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்தார். இன்னொரு அதிகாரி காயமடைந்தார். மேலும் காரை ஓட்டிவந்த நபர், காரிலிருந்து வெளியில் குதித்து, காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முற்பட்டார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள், அந்த நபரை சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள அந்த நாட்டுக் காவல்துறை அதிகாரிகள், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளனர். அதேநேரத்தில் அமெரிக்க ஊடகங்கள், இந்தியானா பகுதியைச் சேர்ந்த 25 வயதான நோவா கிரீன் என்பவரே இந்த செயலில் ஈடுபட்டார் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும், அவரின் சமூகவலைதள பதிவுகள் அவர் விரக்தி மற்றும் சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டவர் என்பதை தெரிவிப்பது போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த சம்பவதிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காவல்துறை அதிகாரி உயிரிழந்ததை அறிந்து தானும், தனது மனைவியும் மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "அமெரிக்க கேபிடல் சோதனைச் சாவடியில் நடந்த வன்முறை சம்பவத்தில், கேபிடல் காவல்துறை அதிகாரி வில்லியம் எவன்ஸ் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார் என்பதையறிந்து, நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) மனமுடைந்தோம். அதிகாரி எவன்ஸின் குடும்பத்தினருக்கும், அவரது இழப்பால் வாடும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார்.