சிரியாவில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு படையினர், சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது இந்தாண்டின் தொடக்கத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க இராணுவம் ஈரான் ஆதரவு படை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 17 ஈரான் ஆதரவு படையினர் பலியானார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றவுடன் எடுக்கப்பட்ட, முதல் இராணுவ நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சிரியாவில் நடைபெற்ற தாக்குதல் மூலம் ஈரானுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெற்ற தாக்குதல் மூலம், ஈரானுக்கு என செய்தியை அனுப்பியிருக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. எச்சரிக்கையாக இருங்கள்" என்ற செய்தி அனுப்பப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை, "அமெரிக்கர்களைப் பாதுகாக்க, தான் செயல்படப் போவதாக அதிபர் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறார். அச்சுறுத்தல்கள் வரும்போது, அந்த நேரத்தில், விரும்பும் விதத்தில் நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு" எனக் கூறியுள்ளது.