இந்தியாவில் தற்போது கரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவி வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவையில், இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலை குறித்து விவாதம் நடந்துள்ளது.
அமெரிக்க செனட்டின் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியக் குழுக்கள் கூடி கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தன. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர், இந்தியாவில் தற்போது நிலவி வரும் நிலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவின் தற்போதைய நிலைக்கான காரணம் குறித்துப் பேசிய அவர், "இந்தியா இப்போது இத்தகைய மோசமான நெருக்கடியில் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் உண்மையாகவே கரோனா எண்ணிக்கையில் உயர்வைச் சந்தித்துக் கொண்டிருக்கும்போதே, கரோனா அலை முடிந்துவிட்டதாகத் தவறான அனுமானத்தைச் செய்தார்கள். அதனைத்தொடர்ந்து அவசரப்பட்டு ஊரடங்கை விலக்கினார்கள். அதனால் தற்போது தொற்று அதிகரிக்கிறது. இது மிகவும் அழிவுகரமானது" எனத் தெரிவித்தார்.
அப்போது அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரிடம், "இந்தியாவின் கரோனா பரவலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?" எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவின் நிலையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை, நிலைமையை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது. இரண்டாவதாக வருங்காலத்தில் வரப்போகும் பெருந்தொற்றுக்காக நாம் பொதுச் சுகாதாரம் சார்ந்து தயாராக இருக்க வேண்டும். உள்நாட்டு பொதுச் சுகாதார கட்டமைப்பைத் தொடர்ந்து வலுவானதாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும்" எனக் கூறினார்.
மேலும் அவர், "இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய இன்னொரு படம், உலகளாவிய பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலகளாவிய நடவடிக்கை தேவை. குறிப்பாக உலகம் முழுவதுக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வது. ஏனென்றால் உலகத்தின் எந்த மூலையில் வைரஸ் பரவினாலும், அது அமெரிக்காவிற்கும் ஆபத்தாக இருக்கும்" எனக் கூறினார்.