இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்கு சொந்தம் என்பதே இரு தரப்பு மோதலின் மையமாக இருந்து வருகிறது.
கிழக்கு ஜெருசலேம் பகுதி தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு, கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. மேலும், ஜெருசலேத்தை தங்களது தலைநகர் என இஸ்ரேல் கூறி வருகிறது. இதனைப் பல சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக மே 9 முதல் மே 10ஆம் தேதிவரை 'ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடுவதாக இருந்தது. இதனையடுத்து இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன்தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்தின் காசா முனையை தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நேற்று (11.05.2021) நடத்திய வான்வெளி தாக்குதலில் இந்தியவர் ஒருவர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் வயதானவர்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த 31வயதான சௌமியா சந்தோஷ் என்பவர், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் நடந்தபோது சௌமியா, தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள், “சௌமியா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டது. பின்னர் பெரிய சத்தம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளனர்.