Skip to main content

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் - உறுதி செய்த பிரான்ஸ்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

nso group

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறி வருகிறது.

 

இதற்கிடையே, அண்மையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க அழுத்தம் கொடுத்தார். இதன்பிறகு பிரான்ஸ் சென்ற இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், பெகாசஸை தயாரித்து விற்பனை செய்யும் என்.எஸ்.ஓ குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முதற்கட்ட தகவல்களை பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டதோடு, பெகாசஸ் விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இதன்தொடர்ச்சியாக 28 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இஸ்ரேலிய அதிகாரிகள், என்.எஸ்.ஓ அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனத்தின் கணினிகளும் ஆவணங்களும் ஆழமாக தோண்டித் துருவப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் கூறியுள்ளன.

 

இந்தநிலையில் என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனம், தனது வடிக்கையாளர்களாக உள்ள பல்வேறு அரசாங்கங்களை, பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதிருந்து தற்காலிகமாக தடை செய்துள்ளது. என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனம், பெகாசஸ் தவறாக பயன்படுத்தப்பட்டதா என விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், அதனையொட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர், என்.பி.ஆர் ஊடகத்திடம் தெரிவித்தவுள்ளார்.

 

இதற்கிடையே பிரான்சின் இணைய பாதுகாப்பு நிறுவனம், அந்தநாட்டு ஊடகமான மீடியாபார்ட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் பெகாசஸால் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவன பத்திரிகையாளர்கள் இருவரது தொலைபேசிகள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யபட்டதாக மீடியாபார்ட் அதிகாரப்பூர்வமாக புகாரளித்திருந்ததும், அதனை தொடர்ந்து பிரான்ஸ் நாடு விசாரணையை தொடங்கியதும் குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்