இலங்கையில் ஒருபுறம் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் என்று மாற்றங்கள் நடந்துக் கொண்டிருக்க, மறுபுறம் பொருளாதார நெருக்கடிகளைக் கண்டித்து சாலைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இதைத் தொடர்ந்து, அதிபர் மாளிகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராக பீரிஸ், உள்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன, வீட்டு வசதித்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எரிசக்தித்துறை அமைச்சராக காஞ்சனா விஜேசேகர ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆட்சியில் மாற்றங்களை ஒருபுறம் அதிபர் நிகழ்த்திக் கொண்டிருக்க பொதுமக்களின் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கொழும்புவில் காலி சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு, சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியாளர்களுக்கு உணவு கிடைக்கிறது; ஆனால் எங்கள் குடும்பம் பட்டினிக் கிடக்கிறது என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். புதிய பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என்பதும் இவர்களின் குரலாக இருக்கிறது.
இதற்கிடையே, கொழும்பு வன்முறையால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரைத் தளர்த்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வந்தனர். பலரும் மணிக்கணக்கில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.