உலகிலேயே அதிக நீர்வழிப் போக்குவரத்து நடைபெறும் வழித்தடம் சூயஸ் கால்வாய். இந்தக் கால்வாய் வழியாகப் பயணம் மேற்கொண்ட 400 மீட்டர் நீளமான எவர்க்ரீன் நிறுவனத்தின், எவர் கிவென் கப்பல், கடுமையான காற்று காரணமாக கடந்த 22ஆம் தேதி வழியிலேயே சிக்கிக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து கப்பலை மீட்கும் பணிகள் நடைபெற்றது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, சூயஸ் கால்வாயில் சிக்கிய ஏழாவது நாள், கப்பல் மீட்கப்பட்டது. இந்தநிலையில், எகிப்து நாடு, கப்பல் மீட்புப் பணிகளுக்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஒசாமா ராபி, ஒரு பில்லியன் டாலர் என்பது, போக்குவரத்துச் செலவு, மீட்டுப் பணிகளுக்கான செலவு மற்றும் அப்போது ஏற்பட்ட சேதாரம், மனித உழைப்பு உள்ளிட்டவற்றின் தோராயமான மதிப்பீடு என்றும், அதனைப் பெறுவதற்கு எகிப்து நாட்டிற்கு அனைத்து உரிமையும் இருப்பதாகவும், இந்தச் சம்பவம் எகிப்து நாட்டின் புகழைப் பாதித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த இழப்பீடு யாரிடம் கேட்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.