உலக நாடுகள் அனைத்திலும் சுகாதாரம், தொழில், கல்வி என அனைத்து அம்சங்களையும் சீர்குலைய வைத்த கரோனா ஜப்பானில் ஆட்சியையே அசைத்துப் பார்த்துள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்து வந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகியநிலையில் யோஷிஹிதே சுகா புதிய பிரதமராகப் பதவியேற்றுச் செயல்பட்டு வந்தார். ஆனால் யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தப் பதவியைத் துறக்கும் முடிவை எடுத்தார் யோஷிஹிதே சுகா. இதற்கும் யோஷிஹிதே சுகா கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில்தான் பதவியேற்றிருந்தார். இந்நிலையில் யோஷிஹிதே சுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார்.
தற்பொழுது புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃபுமியோ கிஷிடா முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். முதல் சுற்றில் சனே ட்காய்சி, சிக்கோ நோடா என்ற இரண்டு பெண் வேட்பாளர்களை எளிதில் தோற்கடித்த ஃபுமியோ கிஷிடாவுக்கு பெரும் சவாலாக இருந்தவர் மற்றொரு வேட்பாளரான தடுப்பூசி அமைச்சரான டேராகோனா. இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இறுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஃபுமியோ கிஷிடா.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் வரும் 4ஆம் தேதி புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார். உட்கட்சி தேர்தலில் வெற்றி எளிதாகக் கிடைத்திருந்தாலும் கரோனா, பொருளாதார சரிவு, தொழில்கள் நலிவடைவு என பல்வேறு சவால்கள் கிஷிடா முன்னும் காத்திருக்கின்றன.