ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் போட்டிகள், நாளை (23.07.2021) ஜப்பானில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள், விளையாட்டை ஏற்பாடு செய்ய வந்தவர்கள் என இதுவரை ஒலிம்பிக் போட்டிகளோடு தொடர்புடைய 77 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீரர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி டெட்ராஸ், "கரோனா புள்ளிவிவரத்தின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. கரோனாவை முற்றிலும் ஒழிப்பது என்பது முடியாத காரியம். பாதிக்கப்படும் விளையாட்டு வீரர்களை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலமே இதனைக் கட்டுப்படுத்தலாம்" என்றார்.