உலக அளவில் புகழ்பெற்ற பிரபலமான நிறுவனம் 'மெக்டொனால்ட்'. சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிளைகள் இந்நிறுவனத்திற்கு உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தின் கிளையில் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடாக ப்ரென்ச் ப்ரைஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த பெண்மணிக்கு ஆறிப்போன ப்ரென்ச் ப்ரைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் உணவு சூடாக இல்லை என மெக்டோனால்ட் ஊழியரிடம் கேட்டுள்ளார் அந்த பெண். அதற்கு கடையின் ஊழியர் கெவின் ஹால்லோ குறும்புத்தனமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலாளரிடம் வேண்டுமென்றால் புகார் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்மணியின் மகன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியரைச் சுட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட மைக்கேல் மார்க்கோனை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்பே 2020 ஆம் ஆண்டு மேத்யூ என்ற நபர் மீது மைக்கேல் மார்க்கோன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.