அமெரிக்காவைத் தொடர்ந்து நிலவில் தங்களது தேசியக்கொடியை நிறுவிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிகளில் தற்போது அதிக கவனம் செலுத்திவரும் சீனா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது சாங் இ5 விண்கலத்தை நிலவில் தரையிறங்கியது. நிலவில் நிலப்பகுதியிலிருந்து மணலின் மாதிரிகளைக் கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம் வியாழக்கிழமை அன்று நிலவிலிருந்து பூமிக்கு கிளம்பியது. 1970 ஆம் ஆண்டு ரஷ்யாவின் விண்கலம் ஒன்று நிலவின் மாதிரிகளை பூமிக்கு எடுத்துவந்தது. அதன்பிறகு நிலவின் மாதிரிகள் பூமிக்கு எடுத்துவரப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இந்த சீன விண்கலம் சுமார் 1.8 கிலோ அளவிலான நிலவின் மணல் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவருகிறது.
சீனா நிலவிற்கு அனுப்பிய நான்காவது விண்கலமான இது சீனாவின் தேசியக்கொடி ஒன்றையும் நிலவின் மேற்பரப்பில் நிறுவியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. துணியினால் ஆன இந்த தேசியக்கொடியை நிலவில் நிறுவியது மூலம் அமெரிக்காவிற்கு அடுத்து நிலவில் தங்களது தேசிய கோடியை நிறுவிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு நிலவில் இறங்கிய அமெரிக்காவின் அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு அந்நாட்டின் தேசியக்கொடியை முதன்முதலில் நிறுவியது குறிப்பிடத்தக்கது.