பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள தீவு நாடு டோங்கோ. ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட டோங்கோ நாட்டில் பல்வேறு சிறு சிறு தீவுகள் உள்ளன. அத்தீவுகளில் நிலப்பரப்புகள் மீதும், கடலுக்கு அடியிலும் எரிமலைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியிலிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. கடலுக்குள் 260 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 கிலோமீட்டர் உயரத்தில் எரிமலை வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியில் சுனாமி அலை உருவானதை அடுத்து தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
மீண்டும் தீவில் எரிமலை வெடிப்பு நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு அதனைத் தொடர்ந்து உருவான சுனாமி பேரலை விளைவாக டோங்கோ தீவிலிருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னை வரை அதன் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு 8:15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வளிமண்டல அழுத்தமானி மூலம் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொங்கோ-வில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ள நிலையில் இதன் பாதிப்பு வருங்காலங்களில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.