உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இவரும் மெலிண்டாவும் 1987இல் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மெலிண்டா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ராடக்ட் மானேஜராக பணியில் சேர்ந்தார். இதன்தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
இதன்பிறகு 27 ஆண்டுகள் நீடித்திருந்த இவர்களது திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பில் கேட்ஸும் மெலிண்டாவும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். பில்கேட்ஸ்க்கு தற்போது 65 வயதாகிறது. மெலிண்டா கேட்ஸ்க்கு தற்போது 54 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பொது சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வரும் நிலையில், இருவரும் பிரிவது பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனைப் பாதிக்குமா என கேள்வியெழுந்தது.
இந்தநிலையில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமை பொறுப்பை வகிப்பார்கள் என அந்த ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசி பணிகளுக்கும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.