விமானத்தில் இளம் பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நிதா என்ற இளம்பெண் லண்டனில் கணவரோடு வசித்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியான அவர் கேரளாவில் உள்ள தாய் வீட்டிற்கு வரும் பொருட்டு, நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து கொச்சி கிளம்பியுள்ளார். விமானம் கருங்கடலுக்கு மேல் பறந்துகொண்டிருந்த போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி பொறுக்க முடியாமல் கத்தியுள்ளார். இவரின் அலறலைக் கேட்ட விமானப் பணியாளர்கள் அங்கிருந்த மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவரை தனியாகக் கொண்டு சென்ற மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆனது. குழந்தையைக் கண்ட சக பயணிகள் மகிழ்ச்சியில் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். நடுவானில் குழந்தை பிறந்ததால் குழந்தை எந்த நாட்டை சேர்ந்த குடிமகனாகக் கருதப்படுவார் என்று இந்த செய்தியைப் பார்த்த இணையவாசிகள் சமூக வலைதளங்களில் தங்களின் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.