ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து மசூதி ஒன்றில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடைபெற்ற இந்த தாக்குதலில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்., ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் பிரிவான ஐஎஸ்-கே அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அந்த அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
இரண்டு மனித வெடிகுண்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போதும், வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து மசூதி ஒன்றின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றது. இதற்கும் ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாத இறுதியில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஐஎஸ்-கே அமைப்பு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியது. இதில் 169 ஆப்கானிஸ்தான் மக்களும், 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் பலியானார்கள்.