பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள டோங்கோ நாட்டில் கடந்த 14 ஆம் தேதி ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியிலிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. கடலுக்குள் 260 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 கிலோமீட்டர் உயரத்தில் எரிமலை வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியில் சுனாமி அலை உருவானதை அடுத்து தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
டொங்கோ-வில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ள நிலையில் இதன் பாதிப்பு வருங்காலங்களில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சுனாமி பேரலையால் 5 நாட்களுக்கு பிறகே டோங்கோ நாடு வெளி உலக தொடர்புக்கு வந்தது. இந்நிலையில் நிலைகுலைந்துபோன டோங்கோ எரிமலை வெடிப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து உருவான சுனாமியில் சிக்கிய 57 வயது முதியவர் ஒருவர் 27 மணி நேரமாக தொடர்ந்து கடலில் போராடி நீந்தி உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சுனாமி பேரலையில் 57 வயது மாற்றுத்திறனாளி முதியவர் லிஷாலா ஃபெலாவு அடித்துச் செல்லப்பட்டார். சுமார் ஒன்பது முறை கடல் நீரில் மூழ்கிய போதும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தொடர்ந்து நீந்திய மாற்றுத்திறனாளி முதியவர், தொடர்ந்து 27 மணி நேரம் போராடிக் கரை சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.