தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தின் மண்டல துணை தாசில்தாராக இருப்பவர் சுல்தான் சலாவுதீன். இவரிடம் தங்களது பூர்வீக சொத்து தொடர்பாக பட்டா மாற்றம் செய்ய சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார் நெல்லை சட்டக் கல்லூரி மாணவர் முருகலிங்கம்.
சாத்தான்குளம் அருகேயுள்ள துவர்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகலிங்கம், அங்குள்ள தனது பாட்டி பூங்கனியின் பூர்வீக சொத்திற்குத்தான் பட்டா மாற்றம் செய்யக் கேட்டு சாத்தான்குளம் மண்டல துணை தாசில்தாரிடம் நடையாய் அலைந்தும், தாசில்தார் சுல்தான் சலாவுதீன் அவரை அலைக்கழித்திருக்கிறார். அதற்கு பிறகும் முருகலிங்கத்திடம் பட்டா மாற்றம் செய்ய துணை தாசில்தார் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் முருகலிங்கம், நடந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்சம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாரிடம் புகார் செய்திருக்கிறார். அவர்களின் திட்டப்படி ரசாயனம் தடவிய நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை நேற்று (26.04.2021) மண்டல துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் பணமுமாகப் பிடித்தனர்.
அதன் பின் தாலுகா அலுவலக கதவுகளை மூடிவிட்டு, அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் மண்டல துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீனை கைது செய்தனர். லஞ்சம் காரணமாக மண்டல துணை தாசில்தார் பிடிபட்ட சம்பவத்தால் சாத்தான்குளம் அரசு அலுவலகங்கள் பரபரப்பிலிருந்தன.